மாதராய் பிறந்தாய்

மார்ச் 11, 2023

பெண்மணி பெண்மணி அகிலம் போற்றும் கண்மணி

உலகமே நம் வெற்றியின் மேடை

நம் பக்கம் வராது தோல்வியின் வாடை

சீறும் பெண்ணும் உண்டு சிரிக்கும் பெண்ணும் உண்டு

பிரச்சினை தன்மை கண்டு சீறுவதும் உண்டு சிரிப்பதும் உண்டு

பல்லாங்குழியும் ஆடுவோம் பனி மலை மீதும் ஏறுவோம்

பூமி முதல் வானம் வரை ஆளுவோம்

வெற்றியின் மகளாய் மாறுவோம்

புகழ் மாலைகளோடு வாழுவோம்

கவிதைகளின் கவிதைகளாய் மாறுவோம்

பாடல்களின் பாடல்கலாய் மீளுவோம்

பதவிகளும் பதக்கங்களும் நம் பிள்ளைகள்

அகில உலகத்திலும் நமக்கேது எல்லைகள்

இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் நமக்கான நாள் தான்

ஒவ்வொரு நாளும் பூக்களாய் பூப்போம்

புன்னகையாய் மலர்வோம்

மாதர்களாய் இருப்போம்

நமது உயிரின் உணர்வுகளாய் உயிர்ப்போம்

குலம் காக்கும் சக்தியாய் உயர்வோம்

அவ்வாறே நிலைப்போம்


+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்

மார்ச் 17, 2010

கல்வியா செல்வமா என்று போட்டியின்றி, கல்விக்காக செல்வமும், செல்வத்திற்காக கல்வியும் துணை புரியுமேயானால் அந்தச் சூழல் என்றும் அறிவுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் அமையும். ஆனால் இன்று செல்வத்தை முன்னிறுத்தியே அல்லது செல்வத்தைச் சுற்றியே உலகம் இயங்குவதால், கல்வியும் பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டது. இந்தச் சூழலில் நல்ல அறிவும், ஆர்வமும், திறமையும் உள்ள இளைங்ஞர்கள் கனவுகளையும், ஏக்கத்தையும் கண்களில் சுமந்து கொண்டு வறுமையால், குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல் ஏதாவது வேலையைத் தேட வேண்டியுள்ளது. அத்தகைய இளைஞர்களுக்கு ஓர் மாற்றாக உருவாகியுள்ளது சோஹோ(Zoho University). சோஹோ பல்கலைக்கழகம் சோஹோ கணிப்பொறி நிறுவனத்தின் (Zoho Corporation) ஓர் அங்கமாகும். கணிதத்தில் நல்ல அறிவும், கணிப்பொறியில் ஆர்வமும், கணிப்பொறி சார்ந்த வேலையில் ஈடுபாடும் உள்ள பணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இருபது வயதிற்குள்ளான தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பயிற்சியும், ஊக்கத் தொகையும் தந்து, பயிற்சியின் முடிவில் வேலையில் அமர்த்தி நல்ல சம்பளமும் தருகிறார்கள். ஆக, பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமிருந்து, அதைத் தொடர முடியாமல் போன மாணவர்கள் இதன் மூலம் பொறியியல் வல்லுனர்களுக்கு இணையான வேலையும், ஊதியமும் பெற முடிகிறது. தமிழ் வழி பயின்ற மாணவர்களின் எதிரியான ஆங்கிலத்தைப் பற்றியும் அவர்கள் கவலை படுவதில்லை, அதற்கும் தனி பயிற்சி அளிக்கிறார்கள். படிப்பில் ஆர்வம் இருந்தும், அதற்கான வாய்ப்பில்லாதவர்களுக்கு Zoho ஒரு மாற்றாகவே தோன்றுகிறது.

இன்று பெரும்பான்மையான பட்டங்கள் அல்லது பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில் பெரும் பட்டங்கள் வெறும் அங்கீகாரத்திற்கு மட்டுமே பயன் படுகின்றன. நடைமுறை அறிவிற்கும், கல்வி அறிவிற்கும் உள்ள தூரம் கவலை  அளிப்பதாகவே உள்ளது. Zoho மூலம் வேலை பெரும் மாணவர்களின் கல்வி அங்கீகாரம் கேள்விக்குறியாக இருப்பினும், அதற்கு விடை தேடுவது அத்தனை கடினமானதும் அல்ல. நிரந்தர வருமானம் உறுதியான நிலையில், தொலை தூர கல்வி வாயிலாகவோ அல்லது பகுதி நேர கல்லூரியிலோ பயின்று பட்டம் பெறுவது, இந்தக் குறையை சற்றே குறைக்கும். Zohoவில் பெற்ற அனுபவமும் அதற்கு துணை நிற்கும்.

Zoho University பற்றி அறிய காரணமான திரு.பத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி. திரு.பத்ரி அவர்களின் வைப் பற்றிய பதிவுகள்

http://thoughtsintamil.blogspot.com/2010/03/zoho-university.html

http://thoughtsintamil.blogspot.com/2010/03/zoho.html

மேலும் விவரங்களுக்கு கருத்துரையில் தொடர்பு கொள்ளலாம்.


மகளிர் தினம்

மார்ச் 8, 2010

மகளாய்ப் பிறந்தாய்

சகோதரியாய் வளர்ந்தாய்

மனைவியாய் வாழ்ந்தாய்

தாயாய் நிலைத்தாய்

பெண்ணாய் வாழ்ந்திடலே மாதவம் செய்தலம்மா

என்றென்றைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.


விவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்

ஜனவரி 12, 2010

147 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காலை 6 மணி 33 நிமடங்களுக்கு, அன்றைய கல்கத்தாவில் உதயமான இளைஞர்களின் சூரியன் சுவாமி விவேகானந்தரின் நினைவாக இந்த நாள் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப் படுகிறது. இன்று அந்தச் சூரியன் மறைந்திருந்தாலும் அவர் புகழின் வெளிச்சம் மங்கவில்லை. சுவாமி விவேகானந்தர் ஓர் ஒப்பற்ற இளைய சக்தி. மதத்தைக் கொண்டு மனிதம் வளர்த்தவர் .
விவேகானந்தர்
உலகத்தை இந்து மதம் நோக்கி இழுத்தவர். மதத்தை மனித வாழ்வுக்கு, மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியவர். அவரின் கருத்துக்களும், கொள்கைகளும் எந்த ஒரு மனிதனையும் செயல் வீரனாக, தன்னம்பிக்கை உள்ளவனாக மாற்றவல்லவை. ஒரு சிறந்த சீடனுக்கும், தலைவனுக்கும் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். மத உணர்வை தூண்டாமல், மத கலவரத்தை உண்டாக்காமல் அனைவருக்காகவும் வாழ்ந்தவர். அவர் ஒட்டுமொத்த இளைஞர்களின் பிரதிநிதியாகவே பார்க்கப் பட்டார். அனைத்து இளைஞர்களுக்கும் நல்வழிகாட்டியாகவே வாழ்ந்தார். நமக்கு முன்பிருந்தவர்கள் செய்த ஓர் நற்செயல் அவர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவது. ஆனால் இன்று எத்தனை இடங்களில் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்பது கேள்விக்குறியே. இன்றுள்ள மதத் தலைவர்களானாலும் சரி அல்லது வேறு எந்தக் கூட்டத்தின் தலைவர்களானாலும் சரி, இளைஞர்களை அவர் வழி நடத்தாவிட்டாலும் அவருக்கு எதிரான வழியில் நடத்தாமல் இருந்தாலே போதும், அதுவே அவருக்கு செய்யும் மரியாதைதான். ஒரு நல்ல சீடன் தான் நல்ல தலைவனாக முடியும். நமக்கு தெய்வ நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரின் வாழ்வியல் சிந்தனைகளையும், தன்னம்பிக்கை கருத்துக்களையும் ஏற்றால் ஏற்றம் உண்டு. நல்ல சீடனாக கற்றுக்கொண்டு, நல்ல தலைவனாக கற்றுக் கொடுப்போம்.


நம்பிக்கை

நவம்பர் 4, 2009

பூமி சுற்றினால் இரவும் பகலாகும்
கண்கள் மூடினால் அதுவும் இரவாகும்
இரவை நிலவு வெறுப்பதும் இல்லை
இரவின்றி நிலவும் வருவதுமில்லை
இரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்
அதை மாற்ற நினைப்பது நகையாகும்
கண்கள் சிந்தும் கண்ணீருக்கு
காரணங்கள் இருந்தாலும்
காலம் செய்த காயங்களுக்கு
காலமே மருந்தாகும்
கண்கள் மூடிய பூனையின்
கற்பனைகள் யாவும் கானல் நீராகும்
செய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்
சரித்திரம் படைக்கும் திட்டங்கள் பல உருவாகும்
நல் துணிவு கொண்ட நெஞ்சினால் வரலாறு உருவாகும்
அது எல்லோர்க்கும் வரமாகும்


அம்மா

நவம்பர் 4, 2009

எல்லோரும் பாடும் பாடல் நீ
அன்பிற்கான தேடல் நீ
அர்ப்பணிப்பின் சுவாசம் நீ
அமுத மொழிகளின் தேசம் நீ
சகிப்புத்தன்மையின் சிகரம் நீ
கடவுளின் உருவம் நீ
எனக்காக சுவாசித்தவள் நீ
என்னை அதிகம் நேசித்தவள் நீ
நீ இன்றி உலகில்லை
மூன்றெழுத்து அதன் எல்லை


சமூகத்திலோர் ஊனம்

ஒக்ரோபர் 14, 2009

வீதியிலேயோர் கேடென்றால் நாம்
வீடடைக்கும் வீரரன்றோ மனித
சாதியில் சமத்துவம் இல்லை நம்
உறவுகளில் ஒற்றுமை இல்லை நம்
உரிமையில் அக்கறை இல்லை நம்
கடமையில் கண்ணியம் இல்லை என்றே
பிதற்றும் சாமானிய மாந்தர் நாம்
மறந்துவிட்டோம் நம் சுய ஒழுக்கம்
தான் சமூக ஒழுக்கம் என்று
வாக்கு வங்கியில் பணம் போட்டால்
ஆட்சிக் கட்டிலில் தூங்கலாம் என்றே
நேக்குப் போக்குத் தெரிந்தவர்கள் நித்தம்
நித்தம் அறுவடை செய்கிறார்
வாங்கிய பணம் போதவில்லையென்றே
வெட்கமின்றி கேட்டு வாங்கி அவர்தம்
உரிமையையும் கடமையையும்
சமுதாயத்தையும் சீரழிக்கும் ஒழுக்கத்தில்
ஊனம் விழுந்த ஈனப் பிறவிகளை
சமூகவேசி என்பது தவறாகுமோ


என்ன பாவம் செய்தார்கள் மழலைகள்?

ஒக்ரோபர் 12, 2009

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

வள்ளுவர் அளவிற்கு இலக்கிய நயத்தோடு பாராட்டவில்லை என்றாலும், நம் அளவிற்கு குழந்தைகளை கொஞ்சிப் பாராட்டுவது பொதுவாக அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய செயலேயாகும். மழலைகள் செய்யும் ஒவ்வொரு செயலுமே ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியான அறிக்கை நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவர்கள் எங்கு பிறப்பினும் இவ்வுலகில் வாழ்வதற்கு முழு உரிமை உள்ளவர்களாகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நம் கடமையாகும். சிசு மரணம் தொடர்பான அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள்ளாகவே இறந்து போகின்றன. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இத்தகைய மரணங்களின் காரணிகள் அனைத்துமே எளிதில் தடுக்கப் படக்க்கூடியவையாகும். உலக அளவில் இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது மற்றும் உலக அளவில் இந்த எண்ணிக்கை இருபது இலட்சமாக உள்ளது. ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஓர் குழந்தை இறந்து போக நேர்கிறது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் சராசரியாக எழுபத்தி இரண்டு குழந்தைகள் ஓர் நாள் கூட வாழ முடியாமல் மரணமடைகிறார்கள். மேலும் இருபது இலட்சம் குழந்தைகள் ஐந்து வயதிற்குள்ளாகவே இந்த உலகை விட்டு சென்று விடுகிறார்கள்.

இந்த அத்தனை துயரங்களுக்கும், நிமோனியா போன்ற நோய்களும் அதன் தொற்றுகளும், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற எளிதில் தடுத்து விடக்கூடிய காரணிகளுமே காரணமாகின்றன. இந்திய அரசாங்கத்தின் திட்டங்களும் அதன் பயன்களும் முழுமையாக ஏழை மக்களுக்கு சென்றடையவில்லை என்பதையும், பொருளாதாரத்தில் குறிப்பிடப்படும் அளவிற்கு எட்டிய வளர்ச்சி, நாட்டின் சுகாதாரத் துறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையும் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சந்திரனையும், செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், இந்தியாவில் பாதிக்கும் அதிகமான பெண்கள் தேவையான தகுதி உள்ளவர்களால் பிரசவம் பார்க்கப் படுவதில்லை என்ற உண்மையும் இந்த அவலத்திற்கு முக்கிய காரணமாகும்.இந்த துயரம் ஒன்றும் தடுத்து நிறுத்தப்பட முடியாததும் அல்ல, வெறும் நான்கு கோடி ரூபாய் இதற்காக செலவு செய்தாலே குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய சமூக அவலங்களை எல்லாம் அழிக்காமல், ஓர் நாட்டிற்கு வளர்ச்சி என்பது வெறும் திட்டங்களில் மட்டும் தான் இருக்க முடியும்.


சர்வதேச கிரிக்கெட் நிலவரம்

செப்ரெம்பர் 22, 2009

[clearspring_widget title=”Cricinfo International Scores” wid=”482c264908cd8b29″ pid=”4ab8ad2662fa008b” width=”300″ height=”250″ domain=”www.widgets.cricinfo.com”]


காதலின் நினைவுகள்

செப்ரெம்பர் 4, 2009

நிலவை சுற்றும் மேகங்களாய்
உன்னை சுற்றித் திரிந்த அவன் நினைவுகள்
எத்தனை கரு மேகங்கள் சூழ்ந்தாலும்
நிறம் மாறாத நிலவைப் போன்று
அவன் நினைவகற்றா உன் நினைவுகள்
என்று பதியம் போட்ட பட்டு
ரோஜாச் செடியானது இந்தக் காதல்

உன்னிடம் கண்ட அவன் வாசமும்
அவனிடம் கண்ட உன் வாசமும் தான்
இந்த காதலின் சுவாசமானது

அவன் பார்வைத் தீண்டலின் போதெல்லாம்
உன் வெட்கம் இந்தக் காதலின் ஆடையானது

நீ கொடுத்த பொருளை அவனும்
அவன் கொடுத்த பொருளை நீயும்
வீட்டில் எங்கெங்கோ வைத்தாலும் இந்தக்
காதலை மட்டும் உங்கள் நெஞ்சத்தில் வைத்தீர்களே

காற்று கூட புகமுடியா இடத்திலும் இந்தக்
காதல் புகும் என்று உங்கள் நெருக்கத்தில் உணர்த்தினீர்களே

உன் நெற்றியை ஒற்றியே அவன்
பொட்டிட்டுக் கொள்ளும் போதெல்லாம்
உன் புன்னகையில் பூத்துக் குலுங்கிய  இந்தக் காதல்

இன்று ,

உடைந்த வளையல்களையும், கிழிந்த புடவைகளையும்,
பொட்டிழந்த உன் நெற்றியையும் பார்க்கும் போது
உன் கண்களின் நீரில் மௌனமாகி உனக்குள் சிறைபட்டுவிட்டது.
உன் நெற்றியில் பொட்டில்லாத காரணத்தால் தான்
அவன் புகைப்பட நெற்றியும் கூட பொட்டிட்டுக் கொள்ள மறுக்கிறது.

அவன் மறைந்தாலும் உங்கள் காதல்
உனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறது

நீங்கள் உன்னதமானவர்கள்
நீ மறைந்தாலும் இந்தக் காதல்
உங்கள் கல்லறையைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.