+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்

மார்ச் 17, 2010

கல்வியா செல்வமா என்று போட்டியின்றி, கல்விக்காக செல்வமும், செல்வத்திற்காக கல்வியும் துணை புரியுமேயானால் அந்தச் சூழல் என்றும் அறிவுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் அமையும். ஆனால் இன்று செல்வத்தை முன்னிறுத்தியே அல்லது செல்வத்தைச் சுற்றியே உலகம் இயங்குவதால், கல்வியும் பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டது. இந்தச் சூழலில் நல்ல அறிவும், ஆர்வமும், திறமையும் உள்ள இளைங்ஞர்கள் கனவுகளையும், ஏக்கத்தையும் கண்களில் சுமந்து கொண்டு வறுமையால், குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல் ஏதாவது வேலையைத் தேட வேண்டியுள்ளது. அத்தகைய இளைஞர்களுக்கு ஓர் மாற்றாக உருவாகியுள்ளது சோஹோ(Zoho University). சோஹோ பல்கலைக்கழகம் சோஹோ கணிப்பொறி நிறுவனத்தின் (Zoho Corporation) ஓர் அங்கமாகும். கணிதத்தில் நல்ல அறிவும், கணிப்பொறியில் ஆர்வமும், கணிப்பொறி சார்ந்த வேலையில் ஈடுபாடும் உள்ள பணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இருபது வயதிற்குள்ளான தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பயிற்சியும், ஊக்கத் தொகையும் தந்து, பயிற்சியின் முடிவில் வேலையில் அமர்த்தி நல்ல சம்பளமும் தருகிறார்கள். ஆக, பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமிருந்து, அதைத் தொடர முடியாமல் போன மாணவர்கள் இதன் மூலம் பொறியியல் வல்லுனர்களுக்கு இணையான வேலையும், ஊதியமும் பெற முடிகிறது. தமிழ் வழி பயின்ற மாணவர்களின் எதிரியான ஆங்கிலத்தைப் பற்றியும் அவர்கள் கவலை படுவதில்லை, அதற்கும் தனி பயிற்சி அளிக்கிறார்கள். படிப்பில் ஆர்வம் இருந்தும், அதற்கான வாய்ப்பில்லாதவர்களுக்கு Zoho ஒரு மாற்றாகவே தோன்றுகிறது.

இன்று பெரும்பான்மையான பட்டங்கள் அல்லது பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில் பெரும் பட்டங்கள் வெறும் அங்கீகாரத்திற்கு மட்டுமே பயன் படுகின்றன. நடைமுறை அறிவிற்கும், கல்வி அறிவிற்கும் உள்ள தூரம் கவலை  அளிப்பதாகவே உள்ளது. Zoho மூலம் வேலை பெரும் மாணவர்களின் கல்வி அங்கீகாரம் கேள்விக்குறியாக இருப்பினும், அதற்கு விடை தேடுவது அத்தனை கடினமானதும் அல்ல. நிரந்தர வருமானம் உறுதியான நிலையில், தொலை தூர கல்வி வாயிலாகவோ அல்லது பகுதி நேர கல்லூரியிலோ பயின்று பட்டம் பெறுவது, இந்தக் குறையை சற்றே குறைக்கும். Zohoவில் பெற்ற அனுபவமும் அதற்கு துணை நிற்கும்.

Zoho University பற்றி அறிய காரணமான திரு.பத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி. திரு.பத்ரி அவர்களின் வைப் பற்றிய பதிவுகள்

http://thoughtsintamil.blogspot.com/2010/03/zoho-university.html

http://thoughtsintamil.blogspot.com/2010/03/zoho.html

மேலும் விவரங்களுக்கு கருத்துரையில் தொடர்பு கொள்ளலாம்.