என்ன பாவம் செய்தார்கள் மழலைகள்?

ஒக்ரோபர் 12, 2009

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

வள்ளுவர் அளவிற்கு இலக்கிய நயத்தோடு பாராட்டவில்லை என்றாலும், நம் அளவிற்கு குழந்தைகளை கொஞ்சிப் பாராட்டுவது பொதுவாக அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய செயலேயாகும். மழலைகள் செய்யும் ஒவ்வொரு செயலுமே ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியான அறிக்கை நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.
இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவர்கள் எங்கு பிறப்பினும் இவ்வுலகில் வாழ்வதற்கு முழு உரிமை உள்ளவர்களாகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நம் கடமையாகும். சிசு மரணம் தொடர்பான அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள்ளாகவே இறந்து போகின்றன. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இத்தகைய மரணங்களின் காரணிகள் அனைத்துமே எளிதில் தடுக்கப் படக்க்கூடியவையாகும். உலக அளவில் இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது மற்றும் உலக அளவில் இந்த எண்ணிக்கை இருபது இலட்சமாக உள்ளது. ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஓர் குழந்தை இறந்து போக நேர்கிறது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் சராசரியாக எழுபத்தி இரண்டு குழந்தைகள் ஓர் நாள் கூட வாழ முடியாமல் மரணமடைகிறார்கள். மேலும் இருபது இலட்சம் குழந்தைகள் ஐந்து வயதிற்குள்ளாகவே இந்த உலகை விட்டு சென்று விடுகிறார்கள்.

இந்த அத்தனை துயரங்களுக்கும், நிமோனியா போன்ற நோய்களும் அதன் தொற்றுகளும், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற எளிதில் தடுத்து விடக்கூடிய காரணிகளுமே காரணமாகின்றன. இந்திய அரசாங்கத்தின் திட்டங்களும் அதன் பயன்களும் முழுமையாக ஏழை மக்களுக்கு சென்றடையவில்லை என்பதையும், பொருளாதாரத்தில் குறிப்பிடப்படும் அளவிற்கு எட்டிய வளர்ச்சி, நாட்டின் சுகாதாரத் துறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையும் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சந்திரனையும், செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், இந்தியாவில் பாதிக்கும் அதிகமான பெண்கள் தேவையான தகுதி உள்ளவர்களால் பிரசவம் பார்க்கப் படுவதில்லை என்ற உண்மையும் இந்த அவலத்திற்கு முக்கிய காரணமாகும்.இந்த துயரம் ஒன்றும் தடுத்து நிறுத்தப்பட முடியாததும் அல்ல, வெறும் நான்கு கோடி ரூபாய் இதற்காக செலவு செய்தாலே குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய சமூக அவலங்களை எல்லாம் அழிக்காமல், ஓர் நாட்டிற்கு வளர்ச்சி என்பது வெறும் திட்டங்களில் மட்டும் தான் இருக்க முடியும்.