சமூகத்திலோர் ஊனம்

ஒக்ரோபர் 14, 2009

வீதியிலேயோர் கேடென்றால் நாம்
வீடடைக்கும் வீரரன்றோ மனித
சாதியில் சமத்துவம் இல்லை நம்
உறவுகளில் ஒற்றுமை இல்லை நம்
உரிமையில் அக்கறை இல்லை நம்
கடமையில் கண்ணியம் இல்லை என்றே
பிதற்றும் சாமானிய மாந்தர் நாம்
மறந்துவிட்டோம் நம் சுய ஒழுக்கம்
தான் சமூக ஒழுக்கம் என்று
வாக்கு வங்கியில் பணம் போட்டால்
ஆட்சிக் கட்டிலில் தூங்கலாம் என்றே
நேக்குப் போக்குத் தெரிந்தவர்கள் நித்தம்
நித்தம் அறுவடை செய்கிறார்
வாங்கிய பணம் போதவில்லையென்றே
வெட்கமின்றி கேட்டு வாங்கி அவர்தம்
உரிமையையும் கடமையையும்
சமுதாயத்தையும் சீரழிக்கும் ஒழுக்கத்தில்
ஊனம் விழுந்த ஈனப் பிறவிகளை
சமூகவேசி என்பது தவறாகுமோ

Advertisements

தேர்தல் திருவிழா!

ஏப்ரல் 1, 2009

இந்திய ஜனநாயகமே இந்தப் பதிவு முட்டாள்கள் தினப் பதிவாக அமைந்து விடக் கூடாது.

 

                                      இப்போதெல்லாம் திருவிழாக் காலங்களில் சலுகைகள் தவிர்க்க முடியாததாகி விட்டன. தேர்தலும் ஒரு மிகப் பெரிய ஜனநாயக திருவிழா தான். அதனால் தான் சலுகைகளும் மிகப் பிரமாண்டமாக இருக்கின்றன. இவையெல்லாம் துணிக் கடையில் குலுக்கல் முறையில் ஒருவருக்கு ஏதேனும் வாகனம் வழங்குவதற்கு ஒப்பானது தான். ஆனால் ஆசை இங்குள்ள பெரும்பாலானோரை விட்டு வைப்பதில்லை. வியாபர நிறுவனங்களிலாவது சில நேர்மையான நிறுவனங்களையும், நேர்மையான சலுகைகளையும் கண்டு கொள்ளலாம். ஆனால் இன்று உள்ள அரசியல் கட்சிகளில் உண்மையானவை ஒன்றும் இல்லை. வியாபர நிறுவனங்கள் சலுகைகள் அளிக்க ஆரம்பித்த காலத்தில், அவை முற்றிலும் நேர்மையானைவைகளாகத்  தான் இருந்திருக்கும். அனைத்துமே ஆரம்பத்தில் நேர்மையானவையாகத் தான் இருக்கின்றன, ஆனால் அதிலுள்ள பயன்கள் தெரிய வரும் போது முறைகேடுகள் முடிசூடிக் கொள்கின்றன. வியாபார நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் தந்த ஆதரவினால் தாங்கள் அடைந்த இலாபத்தில் ஒரு பகுதியை, தங்களது நன்றியாக சலுகைகள் மூலமாக தெரிவிக்கும் பாங்காக சலுகைகள்  தோன்றி இருக்கும், அவ்வாறே வளர்ந்திருக்கும். ஆனால் இப்போது வரும் சலுகைகள் எல்லாம் பெரும்பாலும் இலாபத்தை அதிகப் படுத்துவதற்காகவே கொடுக்கப் படுபவை.

                                   ஆனால் அரசியல் கட்சிகள் அளிக்கும் சலுகைகளில் என்ன நோக்கம் இருக்கப் போகிறது.  அவர்கள் அளிப்பது சலுகைகள் அல்ல, திட்டங்கள் என்பார்கள். சலுகைகளுக்கும், திட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. திட்டங்களை செயல்படுத்தும் போது அது மக்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும், அந்த வாய்ப்பினை பயன் படுத்துகின்ற சூழ்நிலையை மக்களுக்கு உருவாக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். ஆனால் சலுகைகளின் பயன்கள் மக்களுக்கு, அவர்களின் எந்த உழைப்பும் இல்லாமல் கிடைத்துவிடும், அது எத்தகைய முன்னேற்றத்தையும் அளிக்காது. அரசியல்வாதிகள் அனைவரும் நன்றாக திட்டமிடுகிறார்கள், என்ன சலுகைகள் அளித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று திட்டமிட்டு, அதை சலுகைகளாக மாற்றி மக்களுக்கு கவர்ச்சி வலை விரிக்கிறார்கள். இத்தகைய சலுகைகளை மக்கள் மீதுள்ள அளவு கடந்த பாசத்தினால் அளிப்பார்களேயானால், அதை அளிப்பதற்கு அவர்கள் எந்த அளவிற்கு இலாபம் அடைந்திருப்பார்கள் அல்லது இன்னும் எவ்வளவு இலாபம் அடைய கணக்குப் போட்டு சலுகைகளாக வாரி வழங்குவார்கள். வியாபார நிறுவன சலுகைகளில் போலித்தனத்தை கண்டு கொண்டால் அங்கு எந்த பொருளையும் வாங்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனம், ஏனெனில் அங்கு பொருள்கள் தரமானதாக, நியாமானதாக இருக்காது. 

                                ஆனால் தேர்தலில் நாம் அவ்வாறு ஒதுங்க முடியாது. இருக்கின்ற கெட்டவர்களில், குறைந்த கெட்டவரை தேர்ந்தெடுக்கலாம் என்று புத்திசாலித்தனமாக சிந்தித்து ஒரு தவறான செயலை செய்து விடாதீர்கள். உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தோன்றினால், யாருக்குமே வாக்களிக்கத் தோன்றவில்லை என்றால் “யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை” என்று முறையான சட்டப் பிரிவை பயன்படுத்தி வாக்குச் சாவடியில் பதியவும்.

                                 இன்றும் ஒரு சில நல்லவர்கள், திறமையானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் இருக்கும் இடமும், அவர்களைச் சுற்றி உள்ளவர்களும் சரியானதாக இல்லை. அதனாலே அவர்களால் வேகமாக செயல்பட முடியவில்லை. கர்ணன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அவன் தவறான இடத்தில் இருந்ததாலே அவன் கொல்லப்பட்டான். வாய்ப்புக் கிடைத்தால் அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்பவர்கள் வாய்ப்பு என்று எதைக் கருதுகிறார்கள்? இப்போது உள்ள சுழ்நிலை தான் சரியான வாய்ப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது. கொலை, கொள்ளை, அராஜகம் போன்றவையெல்லாம் இல்லை என்றால் காவல் நிலையத்திற்கு என்ன வேலை இருக்க முடியும். இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருந்து விட்டால் புதிதாக வரும் நல்லவர் செய்வதற்கு என்ன இருக்கப் போகிறது. இன்று உள்ள யோசிக்கத் தெரிந்த  அனைத்து வயதினருக்கும் தெரியும், இப்போது உள்ள அரசியல் சுழ்நிலை நாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல, அது எந்த ஒரு முன்னேற்றத்திற்கும் உகந்தது அல்ல என்று. நல்ல எண்ணம் கொண்ட அனைவருக்கும் இந்த நிலை மாற வேண்டும், இதை மாற்ற வேண்டும் என்ற உள் மன ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கான துணிவும், முயற்சியும் பெரும்பாலானவர்களுக்கு இல்லாமல் போனதற்கு அனைவரும் பாதுகாப்பான சமூகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம். ஆனால் அத்தகைய பாதுகாப்பான சமூகம் அமைப்பதற்கு அபரிமிதமான துணிவும், முயற்சியும் கொண்ட மனிதர்கள், இளைஞர்கள் தேவை. அத்தகைய சக்தி இல்லாமல் போனதற்கு கல்வி முறையையும் சேர்த்து  இன்றைய தலைமுறையினர் வளர்க்கப்பட்ட சூழ்நிலையும், வளர்க்கப்பட்ட முறையும் தான் காரணம். நம் நாடு உண்மையிலேயே ஜனநாயக நாடாகவும், அரோக்கியமான அரசியல் அடித்தளம் கொண்ட நாடாகவும் அமைய வேண்டுமானால், அடுத்த தலைமுறையினரையாவது சமூக சிந்தனை கொண்டவராகவும், முக்கியமாக அதை செயல்படுத்தும் உறுதி கொண்டவராகவும் வளர்க்க வேண்டும். சுய சார்பு கல்வி முறையை, மதிப்பெண்ணை மட்டும் சார்ந்த கல்வியை மாற்றி அறிவு சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, சமூக முன்னேற்றம் சார்ந்த, தன்னம்பிக்கையை வளர்க்கின்ற கல்வியை அளித்திட முன்வர வேண்டும். இத்தகைய மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நல்ல உள்ளமும், திறமையும் கொண்டவர்கள் வந்தாலன்றி அடுத்த தலைமுறை முன்னேற்றமும் கனவாகவே போய்விடும். அதனால் அரசியல், சமூக ஆர்வமோ, அக்கறையோ உள்ளவர்கள் கண்டிப்பாக அதிலே பங்கெடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை மறக்க வேண்டாம்.

                                தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை, தேர்தலில் போட்டியிடுவது நமது உரிமை. உங்கள் கடமையை செய்ய விருப்பம் இல்லை என்றாலும், உங்கள் உரிமையை நிலை நாட்டி, தங்கள் கடமையை செய்யும் மற்றவர்களுக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுங்கள்.

 

                       நம் உரிமையைப் பெற கடமையை செய்வோம்.