நம்பிக்கை

நவம்பர் 4, 2009

பூமி சுற்றினால் இரவும் பகலாகும்
கண்கள் மூடினால் அதுவும் இரவாகும்
இரவை நிலவு வெறுப்பதும் இல்லை
இரவின்றி நிலவும் வருவதுமில்லை
இரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்
அதை மாற்ற நினைப்பது நகையாகும்
கண்கள் சிந்தும் கண்ணீருக்கு
காரணங்கள் இருந்தாலும்
காலம் செய்த காயங்களுக்கு
காலமே மருந்தாகும்
கண்கள் மூடிய பூனையின்
கற்பனைகள் யாவும் கானல் நீராகும்
செய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்
சரித்திரம் படைக்கும் திட்டங்கள் பல உருவாகும்
நல் துணிவு கொண்ட நெஞ்சினால் வரலாறு உருவாகும்
அது எல்லோர்க்கும் வரமாகும்

Advertisements

மனிதர்களாய் வாழ்வோம்

திசெம்பர் 19, 2008

மழலையாய் பிறந்தோம் மனிதர்களாய் வாழ்வோம்

மலர்ந்தது அத்தனையும் மழலைகள் தாம்

மனிதர்கள் மனங்களில் வஞ்சனை தான்

வெடித்துச்சிதறிய உடல்களுக்கிடையே

வெடிக்காமல் சிதறிய மனங்களோடு

உயிர் இருந்தும் உடல் இருந்தும்

உணர்ச்சியற்ற பிணங்களாய்

மருத்துவர்களே கடவுள்களாய்

பெற்ற மருந்துகளே வரங்களாய்

வசதி படைத்தோர்க்கு வரங்களும்

அதை வாங்க முடியாதோர்க்கு கல்லறைகளும்

காத்துக்கிடக்கும் கேலிக்கூத்து உலகம்

அமைச்சர்களுக்கு அரசு மருத்துவமனையில் நம்பிக்கை இல்லை

அவர் மழலைக்கு அரசுப் பள்ளியில் பாடம் இல்லை

அத்தியாவசியக் கல்வி ஆடம்பரமானது

உரிமையாக வேண்டிய கல்வி கடமையானது

பாடம் சுமையானதால் அது தொழிலானது

வசதியுள்ளோர் வகுப்பறையில்

அதை வாங்க முடியாதோர் வெறும் வெளியில்

விவசாயக்கடன் விவசாயிக்கில்லை

அவன் உழைப்பை நமக்கு இரையாக்கி

அவன் இறப்புக்கு இரையாகிறான்

தான் செத்து தன் தொழில் வளர்க்கிறான்

உலகம் காக்கிறான் காப்பவன் கடவுளானால்

அவன் இயற்கை கடவுள்தான்

இயந்திர உலகில் இரும்பாகிப்போன இதயங்களோடு

இயங்கிக்கொண்டிருக்கிறோம் வாழவில்லை

சேவையும் வியாபாரமாகிப் போன இந்த விஞ்ஞான உலகம்

சிங்காரம் தொலைத்துக் கொண்டிருக்கிறது

தேடும் பொருள் கிடைத்துவிட்டால்

அதன் மதிப்பு குறைந்துவிடும் என்பதாலோ

இறைவனை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறோம்

மதிப்புக் குறைந்தாலும் பரவாயில்லை

நாம் மட்டும் மனிதர்களாகவே இருப்போம்

மனிதநேயம் காப்போம்