தேர்தல் திருவிழா!

ஏப்ரல் 1, 2009

இந்திய ஜனநாயகமே இந்தப் பதிவு முட்டாள்கள் தினப் பதிவாக அமைந்து விடக் கூடாது.

 

                                      இப்போதெல்லாம் திருவிழாக் காலங்களில் சலுகைகள் தவிர்க்க முடியாததாகி விட்டன. தேர்தலும் ஒரு மிகப் பெரிய ஜனநாயக திருவிழா தான். அதனால் தான் சலுகைகளும் மிகப் பிரமாண்டமாக இருக்கின்றன. இவையெல்லாம் துணிக் கடையில் குலுக்கல் முறையில் ஒருவருக்கு ஏதேனும் வாகனம் வழங்குவதற்கு ஒப்பானது தான். ஆனால் ஆசை இங்குள்ள பெரும்பாலானோரை விட்டு வைப்பதில்லை. வியாபர நிறுவனங்களிலாவது சில நேர்மையான நிறுவனங்களையும், நேர்மையான சலுகைகளையும் கண்டு கொள்ளலாம். ஆனால் இன்று உள்ள அரசியல் கட்சிகளில் உண்மையானவை ஒன்றும் இல்லை. வியாபர நிறுவனங்கள் சலுகைகள் அளிக்க ஆரம்பித்த காலத்தில், அவை முற்றிலும் நேர்மையானைவைகளாகத்  தான் இருந்திருக்கும். அனைத்துமே ஆரம்பத்தில் நேர்மையானவையாகத் தான் இருக்கின்றன, ஆனால் அதிலுள்ள பயன்கள் தெரிய வரும் போது முறைகேடுகள் முடிசூடிக் கொள்கின்றன. வியாபார நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் தந்த ஆதரவினால் தாங்கள் அடைந்த இலாபத்தில் ஒரு பகுதியை, தங்களது நன்றியாக சலுகைகள் மூலமாக தெரிவிக்கும் பாங்காக சலுகைகள்  தோன்றி இருக்கும், அவ்வாறே வளர்ந்திருக்கும். ஆனால் இப்போது வரும் சலுகைகள் எல்லாம் பெரும்பாலும் இலாபத்தை அதிகப் படுத்துவதற்காகவே கொடுக்கப் படுபவை.

                                   ஆனால் அரசியல் கட்சிகள் அளிக்கும் சலுகைகளில் என்ன நோக்கம் இருக்கப் போகிறது.  அவர்கள் அளிப்பது சலுகைகள் அல்ல, திட்டங்கள் என்பார்கள். சலுகைகளுக்கும், திட்டங்களுக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது. திட்டங்களை செயல்படுத்தும் போது அது மக்களுக்கு வாய்ப்பினை உருவாக்கும், அந்த வாய்ப்பினை பயன் படுத்துகின்ற சூழ்நிலையை மக்களுக்கு உருவாக்க வேண்டும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். ஆனால் சலுகைகளின் பயன்கள் மக்களுக்கு, அவர்களின் எந்த உழைப்பும் இல்லாமல் கிடைத்துவிடும், அது எத்தகைய முன்னேற்றத்தையும் அளிக்காது. அரசியல்வாதிகள் அனைவரும் நன்றாக திட்டமிடுகிறார்கள், என்ன சலுகைகள் அளித்தால் என்ன பலன் கிடைக்கும் என்று திட்டமிட்டு, அதை சலுகைகளாக மாற்றி மக்களுக்கு கவர்ச்சி வலை விரிக்கிறார்கள். இத்தகைய சலுகைகளை மக்கள் மீதுள்ள அளவு கடந்த பாசத்தினால் அளிப்பார்களேயானால், அதை அளிப்பதற்கு அவர்கள் எந்த அளவிற்கு இலாபம் அடைந்திருப்பார்கள் அல்லது இன்னும் எவ்வளவு இலாபம் அடைய கணக்குப் போட்டு சலுகைகளாக வாரி வழங்குவார்கள். வியாபார நிறுவன சலுகைகளில் போலித்தனத்தை கண்டு கொண்டால் அங்கு எந்த பொருளையும் வாங்காமல் இருப்பது தான் புத்திசாலித்தனம், ஏனெனில் அங்கு பொருள்கள் தரமானதாக, நியாமானதாக இருக்காது. 

                                ஆனால் தேர்தலில் நாம் அவ்வாறு ஒதுங்க முடியாது. இருக்கின்ற கெட்டவர்களில், குறைந்த கெட்டவரை தேர்ந்தெடுக்கலாம் என்று புத்திசாலித்தனமாக சிந்தித்து ஒரு தவறான செயலை செய்து விடாதீர்கள். உங்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று தோன்றினால், யாருக்குமே வாக்களிக்கத் தோன்றவில்லை என்றால் “யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை” என்று முறையான சட்டப் பிரிவை பயன்படுத்தி வாக்குச் சாவடியில் பதியவும்.

                                 இன்றும் ஒரு சில நல்லவர்கள், திறமையானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் இருக்கும் இடமும், அவர்களைச் சுற்றி உள்ளவர்களும் சரியானதாக இல்லை. அதனாலே அவர்களால் வேகமாக செயல்பட முடியவில்லை. கர்ணன் எவ்வளவு நல்லவனாக இருந்தாலும், அவன் தவறான இடத்தில் இருந்ததாலே அவன் கொல்லப்பட்டான். வாய்ப்புக் கிடைத்தால் அரசியலில் ஈடுபடுவேன் என்று சொல்பவர்கள் வாய்ப்பு என்று எதைக் கருதுகிறார்கள்? இப்போது உள்ள சுழ்நிலை தான் சரியான வாய்ப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது. கொலை, கொள்ளை, அராஜகம் போன்றவையெல்லாம் இல்லை என்றால் காவல் நிலையத்திற்கு என்ன வேலை இருக்க முடியும். இருப்பவர்கள் எல்லாம் நல்லவர்களாக இருந்து விட்டால் புதிதாக வரும் நல்லவர் செய்வதற்கு என்ன இருக்கப் போகிறது. இன்று உள்ள யோசிக்கத் தெரிந்த  அனைத்து வயதினருக்கும் தெரியும், இப்போது உள்ள அரசியல் சுழ்நிலை நாட்டிற்கு பாதுகாப்பானது அல்ல, அது எந்த ஒரு முன்னேற்றத்திற்கும் உகந்தது அல்ல என்று. நல்ல எண்ணம் கொண்ட அனைவருக்கும் இந்த நிலை மாற வேண்டும், இதை மாற்ற வேண்டும் என்ற உள் மன ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்கான துணிவும், முயற்சியும் பெரும்பாலானவர்களுக்கு இல்லாமல் போனதற்கு அனைவரும் பாதுகாப்பான சமூகத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் காரணம். ஆனால் அத்தகைய பாதுகாப்பான சமூகம் அமைப்பதற்கு அபரிமிதமான துணிவும், முயற்சியும் கொண்ட மனிதர்கள், இளைஞர்கள் தேவை. அத்தகைய சக்தி இல்லாமல் போனதற்கு கல்வி முறையையும் சேர்த்து  இன்றைய தலைமுறையினர் வளர்க்கப்பட்ட சூழ்நிலையும், வளர்க்கப்பட்ட முறையும் தான் காரணம். நம் நாடு உண்மையிலேயே ஜனநாயக நாடாகவும், அரோக்கியமான அரசியல் அடித்தளம் கொண்ட நாடாகவும் அமைய வேண்டுமானால், அடுத்த தலைமுறையினரையாவது சமூக சிந்தனை கொண்டவராகவும், முக்கியமாக அதை செயல்படுத்தும் உறுதி கொண்டவராகவும் வளர்க்க வேண்டும். சுய சார்பு கல்வி முறையை, மதிப்பெண்ணை மட்டும் சார்ந்த கல்வியை மாற்றி அறிவு சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த, சமூக முன்னேற்றம் சார்ந்த, தன்னம்பிக்கையை வளர்க்கின்ற கல்வியை அளித்திட முன்வர வேண்டும். இத்தகைய மாற்றத்தை கொண்டு வர நிச்சயம் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நல்ல உள்ளமும், திறமையும் கொண்டவர்கள் வந்தாலன்றி அடுத்த தலைமுறை முன்னேற்றமும் கனவாகவே போய்விடும். அதனால் அரசியல், சமூக ஆர்வமோ, அக்கறையோ உள்ளவர்கள் கண்டிப்பாக அதிலே பங்கெடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருப்பதை மறக்க வேண்டாம்.

                                தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை, தேர்தலில் போட்டியிடுவது நமது உரிமை. உங்கள் கடமையை செய்ய விருப்பம் இல்லை என்றாலும், உங்கள் உரிமையை நிலை நாட்டி, தங்கள் கடமையை செய்யும் மற்றவர்களுக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுங்கள்.

 

                       நம் உரிமையைப் பெற கடமையை செய்வோம்.

Advertisements

வாழ்வு எங்கே

ஜனவரி 30, 2009

ஈரம் இல்லையே ஈரம் இல்லையே

இவர் கண்ணில் மட்டுமில்லை

நெஞ்சிலும் ஈரம் இல்லையே

சக மனிதன் சாகும் போது தன் சாம்ராஜ்யம்

காப்பவனா அரசன் தான்  அழிந்தாலும்

தன் இனம் காக்கத் துடிப்பவனே மனிதன்

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்றானே

இங்கே இருப்பவர்கள் இதயமாவது துடிக்கிறதா

ங்கள் நெஞ்சம் பதைக்கவில்லை

அங்கே நிம்மதி நிலைக்கவில்லை

வஞ்சம் தீர்க்கிறார்கள் அவர்கள் வாழ்வை அழிக்கிறார்கள்  

நீ இனம் காக்கவில்லை உன் குணம் காட்டவேண்டாம்

மனம் ஒன்று இருந்தால் மனிதன் என்று நினைத்தால்

மனிதம் காக்க வேண்டாமா

உயிர்களைக் கொன்று அதை வைத்தா உங்கள் கஜானாவை நிரப்புகிறீர்கள்

எங்களுக்கு இலவசம் இனி வேண்டாம்

ங்கள் வாக்குகளை வைத்துள்ளீர்கள் 

எங்கள் இனத்தாரை வாழ விடுங்கள்

ஊண் அழிக்கும் நோய் இல்லை

உயிர் அறுக்கும் வலி உண்டு

இரவேது பகலேது இருப்பதற்கே இடமில்லை

உறவேது பிரிவேது வாழ்வதற்கே உரிமையில்லை என்று

வாடும் மைந்தர்களின் இரைப்பையை நிறைக்க வேண்டாம்

வாரி எடுத்து அணைக்க வேண்டாம்

தோள் கொடுத்து தூக்க வேண்டாம்

அவர் செந்நீரை நிறுத்தி கண்ணீரை துடைக்க

ஒரு விரலேனும் தாருங்கள்

 


கனவுகள் மட்டுமே துணை

திசெம்பர் 24, 2008

 

கனவுகளை நோக்கி

கனவுகளை நோக்கி

 

 

 

கால்நடையோடு கால்நடையாக செல்கிறாயே தம்பி

உன் கண்களின் ஏக்கம் என் மனதை அழுத்துகிறது

பட்டு விரிப்பிலும் பளிங்கு தரையிலும்

நடந்து பழகிய நம் பாசமிகு தம்பி

அறிந்திருக்கமாட்டான் தினம்

முட்களின் முத்தங்கள் தான்

உன் பாதங்களுக்கென்று

விமானியாக விஞ்ஞானியாக மருத்துவனாக

மதியாளனாக அரசனாக ஏன் ஆண்டவனாகக் கூட

கனவு காண கற்றுக்கொடுத்த நம் தம்பிகளுக்கு மத்தியில்

ஏன் தம்பி உன்னை மட்டும் கரிசல் காட்டிலும் கருவேலங்காட்டிலும்

கற்றாழைச் செடிகளோடும் கண்ணீர் துளிகளோடும்

காய்ந்து போன உன் கனவுகளை

காட்டுச் செடிகளுக்கு உரமாக்க

அனுப்பிவிட்டோம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம்

உனக்காக ஒரு நாளாவது வாழ வேண்டுமென்று

ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டிருக்கிறோம்

எல்லா நாளுக்கும் 24  மணிநேரம் தான் என்று தெரிந்துகொண்டு


மனிதர்களாய் வாழ்வோம்

திசெம்பர் 19, 2008

மழலையாய் பிறந்தோம் மனிதர்களாய் வாழ்வோம்

மலர்ந்தது அத்தனையும் மழலைகள் தாம்

மனிதர்கள் மனங்களில் வஞ்சனை தான்

வெடித்துச்சிதறிய உடல்களுக்கிடையே

வெடிக்காமல் சிதறிய மனங்களோடு

உயிர் இருந்தும் உடல் இருந்தும்

உணர்ச்சியற்ற பிணங்களாய்

மருத்துவர்களே கடவுள்களாய்

பெற்ற மருந்துகளே வரங்களாய்

வசதி படைத்தோர்க்கு வரங்களும்

அதை வாங்க முடியாதோர்க்கு கல்லறைகளும்

காத்துக்கிடக்கும் கேலிக்கூத்து உலகம்

அமைச்சர்களுக்கு அரசு மருத்துவமனையில் நம்பிக்கை இல்லை

அவர் மழலைக்கு அரசுப் பள்ளியில் பாடம் இல்லை

அத்தியாவசியக் கல்வி ஆடம்பரமானது

உரிமையாக வேண்டிய கல்வி கடமையானது

பாடம் சுமையானதால் அது தொழிலானது

வசதியுள்ளோர் வகுப்பறையில்

அதை வாங்க முடியாதோர் வெறும் வெளியில்

விவசாயக்கடன் விவசாயிக்கில்லை

அவன் உழைப்பை நமக்கு இரையாக்கி

அவன் இறப்புக்கு இரையாகிறான்

தான் செத்து தன் தொழில் வளர்க்கிறான்

உலகம் காக்கிறான் காப்பவன் கடவுளானால்

அவன் இயற்கை கடவுள்தான்

இயந்திர உலகில் இரும்பாகிப்போன இதயங்களோடு

இயங்கிக்கொண்டிருக்கிறோம் வாழவில்லை

சேவையும் வியாபாரமாகிப் போன இந்த விஞ்ஞான உலகம்

சிங்காரம் தொலைத்துக் கொண்டிருக்கிறது

தேடும் பொருள் கிடைத்துவிட்டால்

அதன் மதிப்பு குறைந்துவிடும் என்பதாலோ

இறைவனை இன்னும் தேடிக்கொண்டே இருக்கிறோம்

மதிப்புக் குறைந்தாலும் பரவாயில்லை

நாம் மட்டும் மனிதர்களாகவே இருப்போம்

மனிதநேயம் காப்போம்


காதல் விளையாட்டு

திசெம்பர் 5, 2008

காதல் கற்றுக்கொடுத்து வருவதில்லை

காயப்பட்டாலும் மறைவதில்லை

காதல் என்பது உணர்ச்சி தான்

உன்னைக் கண்டதும் அதன் உருவம் அறிந்துகொண்டேன்

காதல் எனக்கு என்றும் வராத விளையாட்டு என்றேன்

நான் கற்றுக்கொடுக்கிறேன் என்றாய்

கற்றுக்கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டாய்

வேறு யாருடனும் எனக்கு விளையாடப் பிடிக்கவில்லை

கவிதையாகப் பேசுகின்றேன் என்றாயே

நான் உன்னைப் பற்றி மட்டும் தான் பேசுகின்றேன் என்று உணர்ந்து கொண்டாயா 

வாசம் இல்லை என்றாலும்

காகிதப் பூக்களைச் சூடிக் கொள்கிறாய்

நீயில்லாமல் வெளிச்சமில்லா விளக்காய் இருக்கிறேன்

எறிவதாய் இருந்தாலும் உன் வீட்டுக் குப்பையில் எறிந்துவிடு


வாழ்க வளமுடன்!

நவம்பர் 21, 2008

 

சென்னை சட்டக்கல்லூரி நிகழ்வின் ஒர் பார்வை 

                                                  இங்குள்ள அனைவருக்கும் தாம் நலமாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அது சுயநலமாகவோ, பொதுநலமாகவோ, சுயநலத்தில் பொதுநலமாகவோ, பொதுநலத்தில் சுயநலமாகவோ இருக்கலாம். தான் நலமாக இருக்க வேண்டும் என்பது சுயநலம், தான் நலமாக இல்லாவிட்டாலும் மற்றவகர்கள் நலமாக இருக்க வேண்டும் என்பது பொதுநலம், மற்றவர்கள் நலமாக இருந்தால் தான் தானும் நலமாக இருக்க முடியும் என்பது சுயநலத்தில் பொதுநலம், தான் நலமாக இருந்தால் தான் மற்றவர்கள்  நலமாக இருக்க முடியும் என்பது பொதுநலத்தில் சுயநலம், இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட இங்குள்ள பிரச்சனைகளில் பெரும்பாலும் இல்லாமல் போகும். எதுவாக இருந்தாலும் தன்னோடு தான் சார்ந்த எல்லையோடு நிறுத்திக் கொண்டால் தீங்கில்லை. ஆனால் சுயநலம் போனாலும் பொதுநலம் வாழக்கூடாது, தான் அழிந்தாலும் பிறர் வாழக்கூடாது என்ற எண்ணமே அழிவுக்கு ஆதாரம். எல்லாம் அறிந்திருந்தும் அவ்வாறே அழிவது தான் அசிங்கம். ஏன் இந்த அசிங்கம்?

                                     பகுத்தறிவில்லாததாலா, படிப்பறிவில்லாததாலா, பண்பாடு இல்லாததாலா என்ன காரணம் என்று சிந்திக்கும் போது இவை எதுவும் இல்லாதுதான் காரணமாக சிந்தையில் தோன்றுகிறது. அன்று நடந்த சம்பவத்தை நோக்கும் போது அங்கே படிப்பு,பண்பு,ஒழுக்கம்,கட்டுப்பாடு,கட்டுக்கோப்பு,நீதி,நிர்வாகம் என்று எதுவும் இல்லை. எல்லாவற்றையும் விட மனிதநேயமும் இல்லை மனிதநேயம் இல்லாத இடத்தில் மனிதர்களும் இல்லை. இவற்றை எல்லாம் விதைக்காத வளர்க்காத எவையும் கல்வி கூடங்களாக இருக்க முடியாது. இங்குள்ள அனைவரும் ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் யார் பிறருக்கு உதவ முன்வரவில்லையோ யார் பிறருக்கு நேரும் அநீதியை தடுக்க முன்வரவில்லையோ அவர்கள் தங்களுக்கு மற்றவர்கள் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு எந்த உரிமையும் இல்லாதவர்கள்.   யார் இந்த உரிமை இல்லாதவர்கள்?, நிச்சயமாக நாம் தான். நாம் பிறருக்காக போராடவில்லை, பிறரும் நமக்காக போராடமாட்டார்கள். நமக்கு இதற்கெல்லாம் நேரமும் இல்லை. நாம் வாழ்ந்தாக வேண்டும், பாதுகாப்பாக வாழ்ந்தாக வேண்டும். எந்தப் பிரச்சனையும் நமக்கு வராத வரை எல்லாம் சுலபமாக அமைந்துவிடும். நாம் எப்போதும் மிகுந்த பொறுமைசாலிகள் தான். நமக்கே எதுவும் நேர்ந்தாலும் கூட அதை சகித்துக்கொள்ளும் அளவிற்கு பொறுமைசாலிகள். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள். இங்கு நாம் கண்மூடிக்கொண்டிருப்பதால் விழித்துக் கொண்டிருப்பவர்கள் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கு கிடைத்திருக்கும் அரசியல்வாதிகள் அனைவருமே சுயநலமில்லாத பொதுநலவாதிகள். எரிகின்ற தன் வீட்டை விட்டுவிட்டு பக்கத்து தெருவில் எரியும் வீட்டை சரிசெய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள்.  இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொறுமைசாலிகள் நாம்.  

இலங்கையில் இனம் அழிகின்றது

இங்கே மனம் கொதிக்கின்றது

இந்த அரசு அங்கேயும் வேடிக்கை பார்க்கின்றது

இங்கேயும் வேடிக்கை பார்க்கின்றது.

நாமும் அதையே செய்வோம்.செய்கிறோம். அதிகபட்சமாக நம்மால் வருத்தப்பட முடியும், நிவாரணம் அளிக்கமுடியும். அது காயத்திற்கு மருந்தாகும், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டும். காயம் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? பொறுமையோடு இருக்க வேண்டும். தென்ஆப்பிரிக்காவின் இன்னல்களுக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று காந்தி நினைத்திருந்தால் இந்தியாவும் சுதந்திரம் அடையாமலே இருந்திருக்கும்.நூறு ஆண்டுகளுக்கு முன்னால் காந்தியும்,பகத்சிங்கும்,வ.உ.சியும் ஆண்டுக்கு ஒருமுறை பிறந்து கொண்டிருந்தார்கள். இனி நூற்றாண்டுகளுக்கு ஒருமுறையேனும் பிறப்பார்கள் என்ற நம்பிக்கையோடும், நமக்கிருக்கும் பொறுமையோடும் இங்கு நடக்கும் அத்துணை அசிங்கங்களோடும் வாழ்வோம் வளர்வோம்.


பிள்ளையார் சுழி

நவம்பர் 19, 2008

இவ்வுலகத்தில் ஓர் மணித்துளியில் பிறக்கும் எண்ணற்ற குழந்தைகளில் ஓர் குழந்தையைப் போல இன்று பிறந்த வலைப்பதிவுகளில் மற்றுமொரு வலைப்பதிவாய் இந்த வலைப்பதிவை தொடங்கியாயிற்று. இந்த மனிதனும் வலைப்பதிவர்களின் சங்கமத்தில் ஓர் துளியாய் இணைந்துவிட்டான் என்று எண்ணும் பொது மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. அதே சமயத்தில் இந்த துளி, நீரில் கலந்த எண்ணையாய் தனித்து விடப்படாமல், கடல் எந்த ஆறையும் வேற்றுமை காட்டாமல் தன்னுள் சேர்த்துக்கொள்வது போல் இந்த வலைப்பதிவும் வலைப்பதிவுகளின் சங்கமத்தில் ஓர் அங்கமாக வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வோர் அடியாய் எடுத்து வைக்கிறேன். என்னை மனிதனாக்கி, தமிழறிவு தந்த, எனக்கு தமிழ்ப்பற்று ஏற்படக் காரணமாகிய, தமிழ் எழுத தூண்டிய எனது ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும், சக மனிதர்களுக்கும், நான் படித்து ரசித்து வியந்த வலைப்பதிவாளர்களுக்கும், கவிஞர்களுக்கும், கதையாசிரியர்களுக்கும், முகம் தெரியாத அத்துணை ஜீவன்களுக்கும் எனது பனிவான நன்றிகளை சமர்ப்பிக்க என்றும் கடமைப்பட்டுள்ளேன். இந்த வலைப்பதிவு எதற்காக? இதன் நோக்கம் என்ன? என்ற வினாக்களுக்கு, எனது எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் கருத்துக்களுக்கும் மட்டுமல்லாமல் இதை வாசிக்கும் உங்களது எண்ணங்கள் சிந்தனைகள் கருத்துக்களுக்கும் ஓர் வாசலாக அமைக்க வேண்டும் என்ற முயற்சியையே பதிலாக அளிக்கின்றேன். ஆயிரத்தில் ஒருவனாக இருப்பது சிறப்பு என்றாலும் கூட ஆயிரத்தில் முதல்வனாக இருப்பதே மதிப்பு என்ற என் கருத்தைப் பதிவு செய்து, உங்கள் அனைவரின் விமர்சனங்களுக்கும் உள்ளாகி, உணர்வுகளைப் புண்படுத்தாமல் தொடர வேண்டும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். வலைப்பதிவுகளைப் பற்றி அதிகம் அறியாமலும் பதிவுகள் பதிய நுணுக்கங்கள் தெரியாமலும், இந்த உலகத்தில் எவ்வித அறிமுகம் இல்லாமலும் ஆரம்பித்த இந்த பயணம் பதிவர்களின் ஆதரவோடு தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்போடும், அடுத்த பதிவுக்கான தேடலோடும் இந்த பிள்ளயார்சுழியை நிறைவுசெய்கிறேன்.