புலம்பல்

ஜூன் 23, 2009

மேகங்களைக் கரைத்து, நீரோடையின் சப்தத்தை முத்தமிட்டு, குளிர் போர்வை போர்த்திக்கொண்டு, பாதம் தொட்டு உச்சி குளிரச் செய்து வீசும் தென்றல், அந்தக் காற்றில் நடுங்கும் வேப்பமரத்து இலைகள், எதிர் வீட்டுக் குழந்தைகள் மணல் குவித்து விளையாடும் அழகு, இதை உள்வாங்கிக் கொண்டிருக்கும் தனிமை சுகமா அல்லது சுமையா என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது, நினைவுகளின் அழுத்தத்தினால் மனதில் ஏற்படும் வலி வாழ்க்கையை தின்று கொண்டிருக்கிறதே. ஏன் யாரும் என்னை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? ஏன் யாராலும் என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை? பேச மறுக்கும் தந்தையும், உதாசீனப் படுத்தும் தம்பியும், உதவ மறுக்கும் அண்ணனும், கேலி பேசும் தங்கையும் நினைவில் மாறி மாறி வந்து போகிறார்கள்.எது நடந்தாலும் எப்போதும் மாறாத அன்னையின் பாசத்தாலே அவர்கள், நினைவில் தொடர்ந்து நிற்பதில்லை. இதே மன நிலை உலகில் பலருக்கு இருப்பினும் என்னை மட்டும் ஏன் மன நோயாளி என்கிறார்கள்? மனதில் நினைக்கும் இவற்றையெல்லாம் சொல்லத் தெரியாததாலா? அல்லது வீட்டின் சுண்ணாம்புச் சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாலா? யாருக்குத் தெரியும் அத்தனைக்கும் விடை, விளக்கைத் தேடும் விட்டில் பூச்சியிலும், அதனைக் கவ்வும் பல்லியிலும் உள்ளதென. இந்த உலகமும் அவ்வாறு தானே உள்ளது. என்ன செய்ய நான் மனநோயாளி எனப் பட்டாலும், என் மனம் பேசுவது எனக்கு கேட்கிறது. உங்கள் மனம் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்களா?

Advertisements